×

சுருக்குமடி வலைக்கு தடையை நீக்காவிடில் தேர்தல் புறக்கணிப்பு தமிழகம், புதுவை மீனவர் கூட்டமைப்பு முடிவு

மரக்காணம், மார்ச் 15:சுருக்குமடி வலைக்கு தடையை நீக்காவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது என தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் மீனவர்கள் இந்த சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கும் மீன்கள் மற்றும் வலைகளை மீன் வளத்துறை அதிகாரிகள் அடிக்கடி பறிமுதல் செய்கின்றனர். இதுபோல் மீன் வளத்துறை அதிகாரிகள் மீன்கள், வலைகளை பறிமுதல் செய்யும்போது மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் பிரச்னை ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவர் பகுதியில் சிங்காரவேலர் அனைத்து மீனவர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் புதுவை மாநிலத்தை சேர்ந்த சுருக்குமடி வலை சங்க நிர்வாகிகள், மீன் வியாபாரிகள் சங்கம், மீனவர் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள்  கலந்துகொண்டனர். மீன் பிடிப்பது மீனவர்களின் பிறப்புரிமை, இதில் மீனவர்களின் அனுமதியில்லாமல் மத்திய, மாநில அரசுகள் எந்த சட்டமும் இயற்றக்கூடாது. சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிப்பது என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதை மத்திய, மாநில அரசுகள் தடை செய்யக் கூடாது. மீனவர்களுக்கு தொடர்ந்து எதிராக செயல்படும் மீன் வளத்துறை மண்டல இயக்குனரை மீன் வளத்துறையில் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது. மீனவர்களின் நலன் கருதி தற்போது தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலைக்கான தடையை உடனடியாக நீக்கவேண்டும். இல்லை என்றால் வரும் சட்ட மன்ற தேர்தலை புறக்கணிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Tamil Nadu ,Puthuvai Fishermen's Federation ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...