×

தமிழ்நாடு நாள், எல்லை போராட்ட தியாகிகள் நாள் இரண்டையுமே செய்தது திமுக அரசுதான்: முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு நாள், எல்லைப் போராட்ட தியாகிகள் நாள் இரண்டையுமே செய்தது திமுக அரசு தான் என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று பல்வேறு அறிஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாளாக எவ்வாறு கொண்டாட முடியும்? அந்த நாளில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு பெற்றதைவிட இழந்ததே அதிகம். எனவே, அந்த நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது சரியல்ல என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், அன்னைத் தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்டுவதற்காக தியாகி சங்கரலிங்கனார் உயிர்நீத்ததும், எண்ணற்றோர் போராடியதும் வரலாறு.

‘‘பெயரில் என்ன இருக்கிறது?” என்று தமிழினத்திற்கான தனித்துவமான அடையாளத்தை வழங்க மறுத்த ஆதிக்க மனப்போக்கிற்கு எதிராகப் போராடி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசுதான் இந்த மாநிலத்திற்கு ‘‘தமிழ்நாடு” என்ற பெயரைச் சூட்டியது.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் என்று கருதிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட ஆணையிட்டார். அதே நேரத்தில், தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்க இன்னுயிர் நீத்துப் போராடிய தியாகிகளைப் போற்றும் வகையில் நவம்பர் 1ம் தேதியை ‘‘எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்” என அறிவித்ததுடன், அவர்களுக்கான ஓய்வூதியத்தையும் உயர்த்தினார். இனம், மொழி, பண்பாடு காத்தவர் நம் தலைவர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK government ,Tamil Nadu Day and ,Border Struggle Martyrs Day ,Former Minister ,Thangam Thennarasu ,Chennai ,Tamil Nadu Day ,Former ,DMK ,Minister ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...