×

சாலை அடைப்பு - போக்குவரத்து நிறுத்தம் நாகர்கோவில் குப்பை கிடங்கில் பயங்கர தீ புகை மண்டலத்தால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல்

நாகர்கோவில், மார்ச் 15: நாகர்கோவில் குப்பை கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. புகை மண்டலத்தால், பொதுமக்கள், குழந்தைகள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். நாகர்கோவில் பீச் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.  52 வார்டுகளிலும் சேகரிக்கப்படுகிற குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்திலும் முறையிடப்பட்டது. பசுமை தீர்ப்பாய உத்தரவின் படி தற்போது வலம்புரிவிளை குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகரில் தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகின்றன. இதற்காக நாகர்கோவில் நகர பகுதியில் 11 இடங்களில் நுண்ணுயிரியல் செயலாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. வலம்புரிவிளை குப்பை கிடங்கில்  மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் தனியார் பங்களிப்புடன் தரம் பிரித்து உரமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை குப்பைக்கிடங்கின் ஒரு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென்று பரவத்தொடங்கியது. சிறிது நேரத்தில் குப்பை கிடங்கில் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.. முதலில் 2 தீயணைப்பு வண்டிகளில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், தீயை அணைப்பதில் கடும் சிரமம் இருந்தது. இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 5 தீயணைப்பு வண்டிகள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த தீ விபத்தால், அந்த பகுதி முழுவதும்,  புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து பீச்ரோடு- இருளப்பபுரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. வீடுகளில் இருந்தவர்கள் மூச்சு திணறலுக்கு உள்ளானார்கள். காலை 8 மணிக்கு பிடித்த தீ , நேற்று இரவு வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து அறிந்ததும் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். தீயணைப்பு துறையினருக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், தீயணைப்பு துறையினருக்கு முககவசங்களை வழங்கினார்.

Tags : Nagercoil Garbage Depot ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு