×

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 9வது முறையாக போட்டியிடும் பொன்னாரை எதிர்க்கும் விஜய் வசந்த் தந்தை விட்டு சென்ற பணிகளை தொடருவேன் என உறுதி

நாகர்கோவில், மார்ச் 15: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 9 வது முறையாக போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து, முதல் முறையாக வசந்தகுமார் மகனும், நடிகருமான விஜய் வசந்த் களமிறங்கி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பா.ஜ. சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் 9வது முறையாக களமிறங்கி உள்ளார். தந்தை விட்டு சென்ற பணிகளை நிச்சயம் தொடருவேன் என விஜய் வசந்த் உறுதி அளித்துள்ளார்.  விஜய் வசந்த் அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் நேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் வேப்பமூடு பகுதியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் இன்ஜினியர் அலெக்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பயோடேட்டா
பெயர்  - விஜயகுமார் என்ற விஜய் வசந்த்
பிறந்த தேதி - 20.5.1983
முகவரி - அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம், காவேரி நகர், சைதாப்பேட்டை, சென்னை.
தந்தை பெயர் - எச். வசந்தகுமார், (லேட்) முன்னாள் எம்.பி.
குடும்பம்-  மனைவி,
2 குழந்தைகள்
கட்சி பதவி - அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்.கல்வி தகுதி - பி.காம். (லயோலா கல்லூரி, சென்னை), எம்.ஐ.பி.ஏ. (லண்டன்)
தொழில் - மானேஜிங் டைரக்டர் வசந்த் அன் கோ மற்றும் திரைப்பட நடிகர்.
கட்சி  பணி -  2001 முதல் 2006 வரை மாணவர் காங்கிரஸ் கன்வீனர். 2006 முதல் 2011 வரை இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் (தி. நகர் சட்டமன்ற தொகுதி)
தேர்தல் பணி - 2001ல் சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் பணி. 2006, 2011, 2016, 2019 ல் நாங்குநேரி  தொகுதி தேர்தல் பணி. 2014 , 2019 ல் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணி.
சமூக பணி - பல்வேறு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை. இலவச மருத்துவ முகாம்கள், புயல், கொரோனா பாதிப்பின் போது பல்வேறு குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள், வேலை வாய்ப்பு முகாம்கள்  நடத்துதல், இலவச டியூசன் சென்டர்கள், வேலை வாய்ப்பு திறன் வளர்த்தல் முகாம் உள்ளிட்டவை நடத்துதல்.

Tags : Vijay Vasant ,Kanyakumari ,Ponnar ,
× RELATED இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு காங். வேட்பாளர் விஜய் வசந்திற்கு ஆதரவு