தர்மபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ₹200 அபராதம்

தர்மபுரி, மார்ச் 15: தர்மபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ₹200 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் கார்த்திகா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில், மக்களிடம் மெத்தன போக்கு காணப்படுகிறது. அரசின் நோக்கங்களை புரிந்துகொண்டு திருமணங்கள், சந்தைகள், பொது போக்குவரத்து, இறுதிச்சடங்குகள், திருவிழாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் இவற்றை கவனமாகவும் கண்டிப்பாகவும் பின்பற்றுவது அவசியம் ஆகும்.

இது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம். இனிவரும் காலங்களில் பொது இடங்களில் எவரேனும் முகக்கவசம் அணியாமல் இருந்தால், ₹200 அபராதம் விதிக்கப்படும். வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி பின்பற்றாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சுகாதாரத்துறை, காவல் துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>