×

ஆண்டிபட்டியில் மல்லிகை பூ விலை குறைந்தது வரத்து அதிகரிப்பால் சரிவு

ஆண்டிபட்டி, மார்ச் 15: ஆண்டிபட்டி பகுதியில் மல்லிகை பூக்களின் வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை 1500 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக குறைந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளான கன்னியப்பபிள்ளைபட்டி, பிச்சம்பட்டி, கொத்தப்பட்டி, மாயாண்டிபட்டி, ராஜதானி, சித்தார்பட்டி, கதிர்நரசிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இந்த மல்லிகை பூக்களை விவசாயிகள் ஆண்டிபட்டி நகரில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். ஆண்டிபட்டி மார்கெட்டில் இருந்து மதுரை, திண்டுக்கல் போன்ற வெளிமாவட்டங்களுக்கும், கேரளா மாநிலத்திற்கும் அனுப்பப்படுகிறது. மேலும் மார்க்கெட்டில் மிஞ்சிய பூக்கள் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள செண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்துள்ள நிலையில் மல்லிகை பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூ மார்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் மல்லிகை பூ 1200 முதல் 1500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் பூக்களின் வரத்து அதிகரிப்பால் தற்போது கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது விற்கப்படும் பூ விலை, பறிப்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்கே சரியாக உள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Andipatti ,
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...