×

இளையான்குடி அதிமுகவில் விரிசல் திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

இளையான்குடி, மார்ச் 15: இளையான்குடி பகுதி அதிமுகவினர் திமுகவில் சேர்ந்து வருவதால், அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மானாமதுரை சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளையான்குடி பகுதியில் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் கடந்த சில நாட்களாக திமுகவில் சேர்ந்து வருகின்றனர். கவுன்சிலர்கள் பெரும்பச்சேரி முருகன், முன்னாள் கவுன்சிலர் கண்டனி பாஸ்கரன், கோட்டையூர் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சைமன், பெரும்பச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் சாவித்திரி, கோட்டையூர் ஊராட்சிமன்றத் தலைவர் அனிதா, எல்ஐசி முருகன், அதிமுக கிளைச் செயலாளர்கள் ரமேஷ்பாபு, நாகநாதன் மற்றும் சூராணம் பகுதியைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகினர்.

இவர்கள் அனைவரும் திமுக முன்னாள் அமைச்சர்களான பெரியகருப்பன், தென்னவன் மற்றும் இளையான்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் கொள்கை, கொள்ளையடிப்பதாக உள்ளதால், மாவட்டச் செயலாளர் மற்றும் எம்எல்ஏவிடம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியதால், திமுகவில் இணைந்துள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த ஆட்சி திமுக தலைமையில்தான் எனவும், திமுகவில் புதிதாக இணைந்துள்ள அதிமுகவினர் கருத்து தெரிவித்துள்ளனர். இளையான்குடி பகுதியில் நாளுக்குநாள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து வருவது, மானாமதுரை தொகுதி அதிமுக அஸ்திவாரமும், இளையான்குடி பகுதி அதிமுகவில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தேதி வரையில் ஏராளமானோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேரும் வாய்ப்பு உள்ளதாக திமுகவில் புதிதாக சேர்ந்த அதிமுகவினர் கூறியுள்ளனர்.

Tags : AIADMK ,Ilayankudi ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...