×

திமுக தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களும் அமோக வரவேற்பு

சிவகங்கை, மார்ச் 15: திமுக தேர்தல் அறிக்கையை விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஏப்.6 நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்ககு திமுக சார்பிலான தேர்தல் அறிக்கையை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கைதான் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கிராமங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து பேசப்பட்டு வருகிறது. 30 வயதிற்குட்பட்ட மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருதல், நீட்தேர்வு ரத்து, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்குதல்.

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம், மகப்பேறு கால விடுப்பு 9மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்தல், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லட் வழங்கல், எட்டாம் வகுப்பு வரை அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம், அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட அறிவிப்புகள் ஆசிரியர், அரசு ஊழியர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. விவசாயத்திற்கு தனி பட்ஜெட், நீர் மேலாண்மை, ஆறுகளை பாதுகாக்க திட்டம், நூறு நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படுவது, கூட்டுறவு வங்கிகளில் 5பவுன் வரையுள்ள நகைக்கடன் தள்ளுபடி ஆகிய அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு, மகப்பேறு கால உதவித்தொகை ரூ.24ஆயிரமாக உயர்த்தி வழங்கல், ஆவின் பால் விலை குறைப்பு, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், உள்ளிட்ட அறிவிப்புகள் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ஆட்டோ வாங்குவதற்கு ரூ.10ஆயிரம் மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தொழிலாளர்கள், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
விவசாயி கண்ணன் கூறியதாவது,‘தேர்தல் அறிவிப்பில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்ற அறிவிப்பு நிச்சயம் நலிவடைந்து வரும் விவசாயத்தை ஊக்குவிக்க உதவும்.

இதுபோல் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம், விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்வது என விவசாயத்திற்கு உண்மையான முக்கியத்துவம் கொடுத்து தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை அனைவருமே நிச்சயம் வரவேற்பர் என்றார். வர்த்தகர் சண்முகம் கூறியதாவது, ‘மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதனால் மின் கட்டணம் பாதியாக குறையும். இது எங்களை போன்ற வர்த்தகர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் ஆகும் என்றார்.

Tags : DMK ,
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்