சென்னை அஞ்சல் குறியீடு இருந்தால்தான் முதியோர் பஸ் பாஸ் மாநகர போக்குவரத்து கழகம் கைவிரிப்பால் 4 ஆண்டுகளாக அலையும் மூத்த குடிமக்கள்

திருப்போரூர், மார்ச் 15: சென்னை அஞ்சல் குறியீடு இருந்தால்தான் முதியோர் பஸ் பாஸ்என கூறி, மாநகர போக்குவரத்து கழகம் கைவிரிப்பால் 4 ஆண்டுகளாக மூத்த குடிமக்கள் அலைகின்றனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் பயன்பெறும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த இலவச பஸ் பாசை பயன்படுத்தி ஏராளமானோர் மாநகர பஸ் பயணம் செய்தனர். இதனால், மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு கணிசமான இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு கடந்த 2017ம் ஆண்டு இத்திட்டத்தை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு வரை சென்னை மாநகர அஞ்சல் குறியீடு இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் முதியோர் இலவச பயண அட்டை வழங்கப்பட்டது. குறிப்பாக, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுசேரி, தாழம்பூர், நாவலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்னை அஞ்சல் குறியீடு எண் 600130 வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அஞ்சல் குறியீடு எண் உள்ள முகவரியில் வசிக்கும் முதியோர்களுக்கு இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டிய ஏகாட்டூர், படூர், வாணியஞ்சாவடி, புதுப்பாக்கம், கேளம்பாக்கம், திருப்போரூர், தையூர், ஆலத்தூர், செம்பாக்கம், மானாம்பதி ஆகிய பகுதிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட அஞ்சல் குறியீட்டு எண் (603110, 603103, 603105, 603108 போன்றவை) வழங்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் குறியீட்டு எண் மத்திய அரசால் வழங்கப்படுவது. இந்த குறியீட்டு எண்ணை வைத்து மாநில அரசின் மூத்த குடிமக்களுக்கான ஒரு திட்டத்தை நிராகரிப்பது ஏற்புடையதாக இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னைப் புறநகரைத் தாண்டி செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருப்போரூர் போன்ற பகுதிகளுக்கும் பஸ்களை இயக்குகிறது. அப்படியெனில் அந்த நிர்வாகத்தின் அனைத்து சலுகைகளும், அப்பகுதி மக்களை சென்றடைய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூத்த குடிமக்கள் இலவச பஸ் பாஸ் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் மூத்தகுடி மக்களுக்கான பஸ் பாஸ் பெற சமூக வலைத் தளங்களில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அடையாறு, திருவான்மியூர், சைதாப்பேட்டை மையங்களில் சென்னை மாநகர அஞ்சல் குறியீடு இல்லாத பகுதிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க முடியாது என வாய்மொழியாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், கிராமப்புற முதியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகம், சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மூத்தோர்களுக்கும் வழக்கம்போல் இலவச பயண அட்டை மற்றும் பயணச்சீட்டுகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையெனில், செங்கல்பட்டு மாவட்டம் வரை சென்னை அஞ்சல் குறியீட்டு எண் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>