×

பெயரளவுக்கு ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறையினர்

 

சேலம், ஜூலை 16: சேலம் அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பெயரளவுக்கு ஆய்வு செய்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மருத்துவமனை வளாகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடம் முன், அவசர சிகிச்சை பிரிவு, சமையல் கூடம், அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களில் ஆவின் பாலகம், டேன்டி மற்றும் தனியார் கடைகள் என மொத்தம் 7 கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு டீ, காபி, பிஸ்கட், இட்லி, போண்டா, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இங்குள்ள கடைகளில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு சூடான இட்லி உள்ளிட்ட உணவுப்பொருட்களை கட்டி தருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் நேற்று சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கவிக்குமார் தலைமையிலான அதிகாரிகள், அரசு மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் விற்பனை செய்யப்படும் டீ, காபி தூள், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் காலாவதி தேதி முடிந்து விற்பனை செய்யப்படுகிறதா? பொருட்கள் தரமாக உள்ளதா? என பரிசோதனை செய்தனர். அம்மா உணவகம் அருகில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தபோது, அதிகாரிகள் முன்பாகவே வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் சூடான இட்லி, சாம்பார் உள்ளிட்ட உணவுப்பொருட்களை பொட்டலம் கட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர். இதன் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அடுத்த கடையை பார்க்க சென்றதாக மக்கள் குற்றம் சாட்டினர். அருகில் இருந்த மற்றொரு கடையில் ஆய்வு செய்தபோது அங்கு வந்த பெண் ஒருவர், கடையில் சுத்தமில்லாமல் டீ விற்பனை செய்யப்படுகிறது.

டீ டம்ளரில் ஈ விழுந்தது குறித்து உணவுபாதுகாப்பு அதிகாரிகள் முன்பே முறையிட்டார். இதை கண்டு கொள்ளாத அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஒரு கடையில் பிளாஸ்டிக் கவரில் கட்டி விற்பனை செய்த சாம்பார், சட்னி பொட்டலங்களை பறிமுதல் செய்து குப்பை தொட்டியில் கொட்டினர். மற்றொரு கடையில் வாழை இலையில் உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கி விட்டு சென்றனர். மக்களின் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டும் கடைகள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், பாரபட்சமாக நடந்து கொண்டது கடும் அதிருப்தியாக உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags : Food safety department ,Salem ,Salem Government Hospital ,Salem Government Medical College Hospital ,
× RELATED சேலத்தில் விஜயேந்திரர் பக்தர்களுக்கு அருளாசி