×

அதிமுக, பாமக வேட்பாளர்கள் பெரியார், அண்ணா சிலைக்கு மாலை

தர்மபுரி, மார்ச் 14: தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பாலக்கோடு தொகுதி வேட்பாளர் உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தலைமையில், பென்னாகரம் தொகுதி வேட்பாளர் பாமக தலைவர் ஜிகே மணி, தர்மபுரி தொகுதி பாமக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கோவிந்தசாமி எம்எல்ஏ, அரூர் தொகுதி சம்பத்குமார் எம்எல்ஏ ஆகியோர் நேற்று மாலை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அண்ணாசிலை, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை, ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அதிமுக கட்சி அலுவலத்தில் 5 வேட்பாளர்கள் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கேபி அன்பழகன், பாமக தலைவர் ஜிகே மணி ஆகியோர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்கள் பயனடையும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி இரட்டை இலை, மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்க வேண்டும். 5 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இதற்கு அனைவரும் அதிமுக - பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார்.

காரிமங்கலம்:  தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் 5வது முறையாக போட்டியிடும் அமைச்சர் அன்பழகனுக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் காரிமங்கலம் ராமசாமி கோயில் அருகே வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாமக மாநில தலைவரும், பென்னாகரம் தொகுதி வேட்பாளருமான ஜி.கே.மணி, தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

Tags : AIADMK ,BJP ,Periyar ,Anna ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...