×

ஜூன் 1ம்தேதி கார் சாகுபடிக்கு தண்ணீர் பாபநாசம்-மணிமுத்தாறு அணைகள் டனல் மூலம் இணைக்கப்படும் அம்பை. தொகுதி திமுக வேட்பாளர் ஆவுடையப்பன் பேட்டி

நெல்லை, மார்ச் 14: அம்பை. தொகுதி திமுக வேட்பாளர் ஆவுடையப்பன் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று நேற்று நெல்லை திரும்பினார். அவருக்கு திமுகவினர் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஆவுடையப்பன் அளித்த பேட்டி: தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக, கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமையும். கடந்த 10ஆண்டில் அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் இல்லை. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஜூன்1ல் கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையை திறக்க வேண்டும் என விதி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 20 போகம் பயிர் செய்திருக்கலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் 7 போகம் விளையவில்லை. அணையில் தண்ணீர் இருந்தும் திறக்கப்படவில்லை. இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது.

அம்பையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 2009ல் புறவழிச்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. திமுக ஆட்சியில் போட்ட திட்டம் என்பதால் 2021 வரை கிடப்பில் போடப்பட்டது. வறட்சி காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க பாபநாசம்- மணிமுத்தாறு அணைகள் டனல் மூலம் இணைக்கப்படும். ஜூன்1ல் கார் சாகுபடிக்கு பாபநாசம் அணை திறக்கப்படும். நெல்லை-பாபநாசம் வரை நான்குவழிச் சாலை திட்டம் அமைக்கப்படும். மாஞ்சோலை தேயிலை தொழிற்சாலை குத்தகை 2028ல் முடிகிறது. 3ஆயிரம் தொழிலாளர்கள் நலன் கருதி அத்தொழிற்சாலையை டான் டீ எடுத்து நடத்த வலியுறுத்துவேன். வீரவநல்லூரில் அரசு மகளிர் கல்லூரி அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வசூடாமணி உடனிருந்தனர்.மாலை கோபாலசமுத்திரத்தில் தொண்டர்களை சந்திக்க வந்த ஆவுடையப்பனுக்கு நகர செயலாளர் முருகேசன் தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மேலச்செவல், பத்தமடை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பை, விகேபுரம் பகுதிகளுக்கு சென்று தொண்டர்களை சந்தித்தார். சேரன்மகாதேவியில் ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி பிரபு தலைமையில் தொண்டர்கள், கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். சேரன்மகாதேவி சாட்டுப்பால விநாகர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து முதியவர்கள், பெண்களிடம் ஆதரவு திரட்டினார். வி.கே.புரத்தில் நகர செயலாளர் கணேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம் அம்பை ஒன்றிய செயலாளர் பரணிசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Papanasam ,Manimuttaru ,DMK ,Autayappan ,
× RELATED பாபநாசம் அருகே ஊர் பொதுக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்