×

பணி நிரந்தரம் கோரி மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்: சேத்துப்பட்டில் பரபரப்பு

 

சேத்துப்பட்டு, ஜூலை 15: சேத்துப்பட்டில் பணி நிரந்தரம்கோரி மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேத்துப்பட்டில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஒப்பந்த பணியாளர்கள் கடந்த 10ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி 4வது நாளான நேற்றும் மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மின்வாரியத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், அவர்களின் பணிநிலையை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறியதாவது: மாநில நிர்வாகிகள் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாரை நேரில் சந்தித்து, பணி நிரந்தரம் குறித்து வலியுறுத்தியபோது, ஒரு வாரத்தில் உரிய பதில் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 9ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒப்பந்த பணியாளர்கள் 7 மாதங்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்றும், காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசையும், மின்சாரத் துறை அமைச்சரையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் காலத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது 7 மாதங்கள் மட்டுமே வேலை செய்து விட்டு செல்ல வேண்டும் என்றும், பின்னர் டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.மழை, காற்று, புயல் உள்ளிட்ட எந்தவிதமான இயற்கை சீற்றங்களிலும் உயிரை பணயம் வைத்து மின் பழுதுகளை சரிசெய்து வருகிறோம். நள்ளிரவிலும் பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கி வருகிறோம். இத்தனை ஆண்டுகள் உழைத்த எங்களுக்கு இன்று வேலை இல்லை என்று கூறினால் எங்களது குடும்பம் எவ்வாறு வாழும்? முதலில் எங்களை தினக்கூலி அடிப்படையிலாவது பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். பின்னர் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.

பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போராட்டத்தில் ஏராளமான ஒப்பந்த மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டு, தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். இதனால் சேத்துப்பட்டு மின்வாரிய அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : SETUPAT ,SETHUPT ,PERMANGANGORI ,Tamil Nadu Electricity Contract Workers Federation ,Elektriya Office Complex ,Sethupat ,
× RELATED ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு இரவில்...