×

3 பேர் மீது வழக்கு ரங்கம் அமமுக வேட்பாளர் மாற்றப்பட்டது ஏன்?

திருச்சி, மார்ச் 14: ரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு அமமுக சார்பில் மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அமமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலிலேயே இவரது பெயர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டே நாளில் இவர், திருச்சி கிழக்கு தொகுதிக்கு மாற்றப்பட்டார். ரங்கத்துக்கு முன்னாள் மேயர் சாருபாலா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மனோகரன் ஏன் திடீரென மாற்றப்பட்டார் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.இதுபற்றி அமமுக வட்டாரத்தில் விசாரித்த போது, 2011ல் நடந்த தேர்தலில் மனோகரன் திருச்சி கிழக்கில் போட்டியிட்டு வென்றார். அவருக்கு அரசு தலைமை கொறடா பதவியை ஜெயலலிதா வழங்கினார். அப்போது தொகுதிக்கு பல அடிப்படை வசதிகளை மனோகரன் செய்து கொடுத்துள்ளார். இதனால் கிழக்கு தொகுதி தனக்கு சாதகமாக இருக்கும் என கட்சி தலைமையிடம் எடுத்துக்கூறியுள்ளார். அதனால் தான், கட்சி தலைமை மனோகரனை கிழக்குக்கு மாற்றி உள்ளது என்றனர்.

அமமுக மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன். முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முதல் நாள், இவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார். இவரை தான் வேட்பாளராக அறிவிக்க தினகரன் முடிவு செய்திருந்தாராம். இவர் திடீரென கட்சி தாவியதால், மக்களிடம் அறிமுகமான வேட்பாளர் தேவை என்ற அடிப்படையில் மனோகரன் கிழக்குக்கு மாற்றப்பட்டதாக பேசப்படுகிறது.அதேசமயம் ரங்கத்தில் அமமுக சார்பில் சாருபாலா நிறுத்தப்பட்டதில் அக்கட்சியினரிடம் அதிருப்தி நிலவுகிறது. ரங்கம் தொகுதியில் முத்தரையர் சமூகத்தினர் அதிகளவில் உள்ளனர். சாருபாலா கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர். அதிமுக, திமுகவில் நிறுத்தப்பட்டுள்ள 2 வேட்பாளர்களுமே முத்தரையர்கள். சாருபாலா மக்களுக்கு பரிச்சயமான முகமாக இருந்தாலும், முத்தரையர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்தினால் தான், ரங்கத்தில் சரியான போட்டியாக அமையும் என்று கூறுகின்றனர். இதனிடையே அதிமுகவில் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் அமைச்சர் வளர்மதி, டிடிவி.தினகரனை ரகசியமாக சந்தித்ததாக கூறப்படுகிறது. எனவே ரங்கத்தில் மீண்டும் வேட்பாளர் மாற்றம் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : Aurangzeb ,
× RELATED ரங்கம் கோயிலில் சொர்க்கவாசல்...