×

அண்ணா சிலைக்கு மரியாதை பட்டதாரிகள் சுயதொழில் செய்ய திட்டம் வகுக்கப்படும் பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ் உறுதி

தக்கலை, மார்ச் 14 : பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குமரி மேற்கு மாவட்ட  திமுக செயலாளர்  மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. திமுக தலைவர்  ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று விட்டு நேற்று தக்கலை வந்தார். தக்கலை அண்ணாசிலை அருகில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்  அங்கு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து குஞ்சன் நாடார்,   காமராஜர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள்  அருளானந்த ஜார்ஜ்,  ஜான்பிரைட், ஜான்சன், ராஜன், முன்னாள் எம்எல்ஏ  புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட அவைத் தலைவர் பப்புசன், பொருளாளர்  மரியசிசுகுமார், அணி அமைப்பாளர்கள் கிளாடிஸ் லில்லி,  வர்கீஸ் மற்றும்  பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்பின்னர் அழகியமண்டபத்தில் கட்சி அலுவலகத்தில் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தத்  தேர்தல் மக்கள் விரோத அரசுகளுக்கு முடிவினை ஏற்படுத்தக் கூடியதாக  உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வாலும், ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளாலும் மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.என்னுடைய  தொகுதியில் கடந்த 5 ஆண்டு காலம் மக்களின் குரலை ஓங்கி ஒலித்துள்ளேன். சாலைகள், சுற்றுலா தலங்கள் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்  எல்லாம் கானல் நீராக இருக்கிறது. கண்டிப்பாக திமுக ஆட்சி அமைக்கும்.  மக்கள் தேவைகளெல்லாம் அறிந்து வைத்துள்ளோம். ஒவ்வொரு துறைக்கும் என்ன  வளர்ச்சி என்ற தொலை நோக்கு பார்வையும் எங்களிடம் இருக்கிறது. நிச்சயமாக இவற்றை நிறைவேற்றுவோம்.  என்னுடைய சட்டமன்ற மேம்பாட்டு நிதியயை முறையாக பயன்படுத்தியுள்ளோம்.  பள்ளிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை அதிகாரிகளோடு போராடி  சாலை பணிகள் நடத்தியிருந்தாலும், கமிஷன் கரெப்ஷன் என்று சொல்கிற அரசு 13.5  சதவீத கமிஷன் பெற்று விட்டு பல்வேறு பணிகளை செய்த காரணத்தினால் பல பணிகள் சீரழிந்து கிடக்கிறது.

 என்னைப்  பொறுத்தவரை கடந்த 21 ஆண்டு காலமாக கட்சியின் முழுநேர பணியாளர். அரசியலில்  எனக்கு 38 ஆண்டு கால அனுபவம் இருக்கிறது. எனவே தொகுதி கட்சிக்காரர்கள்,  தோழமை கட்சிகாரர்கள் இணைந்து தேர்தலை சந்திப்போம்.
கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த தொகுதி மக்களின்  அனைத்து பிரச்னைகளையும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உயர் அதிகாரிகளிடத்திலும் முறையாக  எடுத்து சென்றிருக்கின்றேன், நாங்கள் செய்ததை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம்.  பேச்சிப்பாறை தோட்டக்கலை  பண்ணையை  தோட்டக்கலை ஆராய்ச்சி மையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற  கோரிக்கையை சட்டமன்றத்தில் வலுவாக வைத்திருக்கிறேன், நிச்சயமாக கழக அரசு  அமையும் போது நிறைவேற்றுவற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.இந்த தொகுதியில் 40 கோடி அளவில் சாலை பணிகள், பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வேலைவாய்ப்பையும் வருவாயை ஈட்டும் வகையில் சூழியல் சுற்றுலா தலங்கள்  ஏற்படுத்தப்படும். பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் சுயதொழில்  தொடங்குவதற்கான திட்டங்கள் வகுத்து மானியம், கடன்  செயல்படுத்தப்படும்.  கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பள்ளிகள்  பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mano Thangaraj ,DMK ,Padmanabhapuram ,
× RELATED 10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி...