சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனையால் பண புழக்கம் குறைந்தது

ஊட்டி, மார்ச் 14: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் நடத்தி வரும் வாகன சோதனையால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பணத்தை வெளியில் எடுத்து செல்ல முடியாத நிலையில் பண புழக்கம் குறைந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இைதயொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் பணம் வாகன சோதனை செய்து அதிகளவு எடுத்துச் செல்பவர்களிடம் அதற்கான ஆவணங்களை கேட்டு வருகிறது. மேலும், ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லும் பணத்தை பறிமுதலும் செய்கிறது. நேற்று முன்தினம் வரை ரூபாய் 1 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மற்ற வேலைகளை விட்டு விட்டு, அதிகாரிகள் இந்த வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால், தற்போது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பணத்தை வெளியில் எடுத்துச் செல்வதில்லை. இதனால், பண புழக்கம் முற்றிலும் குறைந்துள்ளது. சாதாரணமாக சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் சிறு வியாபாரிகள் வெளியூர்களுக்கு சென்று பொருட்களை வாங்குவதை தவிர்த்துவிட்டனர். பலர் உள்ளூரில் உள்ள கந்து வட்டி காரர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரம் செய்து வருகின்றனர்.

 இது மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் வெளி மாவட்டங்களுக்கு சென்று பொருட்களை மொத்தமாக வாங்கி வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், சில பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. உள்ளூர் மொத்த வியாபாரிகளிடமே பொருட்களை வாங்கும் நிலை சிறு வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் கந்து வட்டி வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் மருத்துவமனை, திருமண காரியங்களுக்கு பொருட்கள் வாங்க வெளி மாவட்டங்களுக்கு பணத்தை எடுத்துச் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகளும் தைரியமாக பணத்தை எடுத்துக் கொண்டு ஊட்டிக்கு வர தயங்குகின்றனர். இதனால், பண புழக்கம் முற்றிலும் குறைந்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதும் குறைந்துள்ளது.

Related Stories:

>