×

ஜவுளி தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம் துவங்கப்படும்

ஈரோடு, மார்ச் 14: ஈரோட்டில் ஜவுளி தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திமுக  தலைவர் ஸ்டாலின் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதில் ஈரோடு  மாவட்டத்துக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: விசைத்தறி  தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை சரிசெய்ய மத்திய அரசுடன் பேசி உரிய  நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாநகர் போக்குவரத்து நெரிசலை குறைக்க  ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து சூரம்பட்டி நால்ரோடு வழியாக,  ப.செ.பார்க், மணிகூண்டு வழியே பஸ் ஸ்டாண்டு செல்ல இரு மேம்பாலங்கள்  கட்டப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஈரோடு, பெருந்துறையில்  கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். ஈரோடு, ஊத்துக்குளி,  நல்லாம்பட்டி, தாளவாடியில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்படும். ஈரோடு அரசு  மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு புற்றுநோய் சிகிச்சை பிரிவு  துவங்கப்படும். ஈரோட்டில் அரசு சட்ட கல்லூரி, அரசு வேளாண்மை  கல்லுாரி, உணவு பூங்கா அமைக்கப்படும். ஈரோட்டில் மஞ்சள் ஏற்றுமதி மையம்  தரம்

 ஈரோட்டில் இந்திய ஜவுளி தொழில்நுட்ப  அறிவியல் பல்கலைக்கழகம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் தோல்  பதப்படுத்தும் பயிற்சி மையம் அமைக்கப்படும். மொடக்குறிச்சியில்  தொழிற்பேட்டை, பாலிடெக்னிக் கல்லூரி துவங்கப்படும். தாளவாடியில் மூலிகை  பண்ணை அமைக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து உபரிநீரை வாய்க்கால்  மூலம் ஆப்பக்கூடல் பகுதி ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சாய,  தோல் தொழிற்சாலை கழிவு நீர், காலிங்கராயன் வாய்க்காலில் கலக்காமல் இருக்க  நடவடிக்கை எடுக்கப்படும். குரங்கன்பள்ளம் விவசாய நிலங்கள், தாராபுரம் பாசன  பகுதியில் நீக்கப்பட்ட நிலங்கள் எல்.பி.பி. திட்டத்தின் கீழ் கொண்டு வர  நடவடிக்கை எடுக்கப்படும்.
 அந்தியூரில் காவிரி குடிநீர் திட்டம்  செயல்படுத்தப்படும். அந்தியூரில் அரசு கலை கல்லுாரி துவங்கப்படும்.  பவானியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். வேதபாறை நீர்த்தேக்க திட்டம்  செயல்படுத்தப்படும். மணியாச்சி, வரட்டுபள்ளம், வழுக்குப்பாறை ஆறுகளை  இணைத்து அந்தியூர், அம்மாபேட்டை ஒன்றியத்தில் நீர்பாசன வசதி  பெருக்கப்படும். பட்லூரில் புதிய அணை கட்ட ஆவண செய்யப்படும். அந்தியூர்,  பெருந்துறை, புன்செய் புளியம்பட்டியில் தொழிற்பயிற்சி நிலையங்கள்  அமைக்கப்படும்.

பெருந்துறை, கோபியில் அரசு மருத்துவமனை நவீன மயமாககப்படும்.  தாளவாடி, கடம்பூர், பர்கூரில் பணியாற்றும் ஆசிரியர், அரசு ஊழியருக்கு  மலைப்படி வழங்கப்படும். வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு நீர் நிரப்ப  நடவடிக்கை எடுக்கப்படும். அம்மாபேட்டை, குருவரெட்டியூர், குறிச்சி,  ஒலகடம், மொடக்குறிச்சி, உக்கரம், எல்லபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்  மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். பாண்டியாறு-புன்னம்புழா திட்டம்  நிறைவேற்றப்படும். அந்தியூர், பவானி பகுதி விவசாய நிலங்கள் நீர்பாசன வசதி  பெற தோணிமடுவு பாசன திட்டம் நிறைவேற்றப்படும்.  சத்தியமங்கலத்தில்  நறுமண தொழிற்சாலை அமைக்கப்படும். சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு  ஓடாநிலை அருகே ஜெயராமபுரத்திலும், வல்வில் ஓரிக்கு கொல்லிமலையிலும் நினைவு  மண்டபம் கட்டப்படும். பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை அமைய நிலம்  கொடுத்த உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை  எடுக்கப்படும். புங்கம்பாடியில் கால்நடை மருத்துவமனை துவங்கப்படும்.  உள்ளாட்சிகளில் தனியாக வசூலிக்கப்படும் குப்பை வரி நீக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : University of Textile Technology Sciences ,
× RELATED ஈரோட்டில் தேர்தலுக்கு தேவையான...