×

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று  முன்தினம் இரவு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் புஷ்பக விமான பல்லக்கில்  முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
முன்னதாக பூங்கரகம், சக்திகரகம், அக்னிகரகம், மேளக்கச்சேரி, சிலம்பாட்டம்,  கரகாட்டம், மங்கள வாத்தியத்துடன் வாண வேடிக்கைகள் முழங்க திருவீதி உலா  நடந்தது. ெதாடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்  முடிந்தபின் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா  புறப்பட்டார். அம்மனுக்கு நேர்த்தி கடன் செய்ய 7 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள்  8ம் நாளான நேற்று எலுமிச்சை பழங்களை, தங்களது உடல் முழுவதும்  குத்திக்கொண்டும், முதுகில் அலகுகுத்தி கார், வேன் டிராக்டர்கள், உரல்கள்  போன்றவற்றை இழுத்தும், அந்தரத்தில் தொங்கியபடியும், கட்டையாட்டம் ஆடியும்,  காளி வேடமிட்டும், முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வந்து மயானத்தை  சென்றடைந்தனர். அங்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.

அதில் கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனுக்கு காய்கறிகள், பழங்கள்  விளைபொருட்களை மயானத்தில் அம்மனிடம் செலுத்தியும் வேப்பிளை ஆடை  அணிந்து கோயிலை சுற்றி அம்மனை வழிபட்டு, தங்களது வேண்டுதல்களை  நிறைவேற்றினர். பொது மக்கள் எலுமிச்சை பழம் மாலை அணிவித்து அம்மனை  வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர். இரவு கோயில்  வாயிலில் தெருக் கூத்து நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் உத்திரமேரூர் மற்றும்  சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டு  அம்மனை வழிபட்டனர்.செங்கல்பட்டு: செங்கல்பட்டு மேட்டு தெருவில் உள்ள  அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி அமாவாசையையொட்டி, 123ம்  ஆண்டு  மயான கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது. அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.

பின்னர், பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், வாகனங்களில் தொங்கியபடியும்  தங்களின் நேர்த்திகடனை செலுத்தினர். தொடர்ந்து துர்க்கை மற்றும் காளி வேடம்  அணிந்து ஊர்வலமாக சென்று, செங்கல்பட்டு பாலாறு சுடுகாடு பகுதியில் மயான  கொள்ளை நடந்தது. இதில், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை  சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு அடுத்த  ஆத்தூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை  நடந்தது. இதில், பக்தர்கள் உடலில்  அலகு குத்தியபடி, லாரியின் முன் தொங்கியும்,  அலகு குத்தி கார், ஆட்டோக்களை இழுத்து கொண்டு காஞ்சிபுரம் - செங்கல்பட்டு  சாலையில் ஊர்வலமாக சென்று ஆத்தூர் சுடுகாடு சென்று மயான கொள்ளை  உற்சவத்தில் கலந்து கொண்டனர்.

Tags : Mayana robbery festival ,Angala Parameswari Amman temple ,
× RELATED வடபழனி அங்காள பரமேஸ்வரி அம்மன்...