சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்

ஊட்டி, மார்ச் 13: சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று தோட்ட  தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்ட நிறுவன உரிமையாளர்களுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் தமிழக சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல் 2021 வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6ம் தேதி அனைத்து தோட்ட நிறுவன உரிமையாளர்களும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்ட நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்கும், வாக்களிக்கும் இடத்திற்கும் அதிக தூரம் இருக்குமானால் தொழிலாளர்கள் வாக்களிக்க சென்று வருவதற்கான வாகன வசதிகளை அந்தந்த தோட்ட நிறுவன உரிமையாளர்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.

அனைத்து தோட்ட நிறுவனங்களிலும் கொரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ெதாழிலாளர்கள் இது குறித்து ஏதேனும் புகார்கள் தெரிவிக்க விரும்பினால் இலவச தொலைபேசி எண் 18004250034 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம், என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சதீஸ்குமார், தொழிலாளர்த்துறையில் உள்ள அனைத்து உதவி ஆணையர்கள், நீலகிரி மாவட்ட தோட்ட உரிமையாளர்கள் சங்கம், நீலகிரி வயநாடு தோட்ட உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பாட்லிப் டீ தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>