×

மெட்ரோ ரயிலில் போனில் சத்தமாக பேசினாலோ, பாட்டு கேட்டாலோ அபராதம்: மெட்ரோ ரயில்வே எச்சரிக்கை

சென்னை: மெட்ரோ ரயிலில் போனில் சத்தமாக பேசினாலோ, பாட்டு கேட்டாலோ அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்ட அறிக்கை; மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. மெட்ரோ ரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59ன் கீழ், சக பயணிகளுக்கு தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். குறிப்பாக,

அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல்; செவியில் பொருத்திக்கொள்ளும் ஒலிபெருக்கி இன்றி இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது; அலைபேசியில் மெட்ரோ ரயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல்; மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகளை பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் 19.6.2026 அன்று வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, ‘ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026’-இன் கீழ் ஒரு புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் (உதாரணமாக: செவியில் பொருத்திக் கொள்ளும் ஒலிபெருக்கி இல்லாமல் உரத்த சத்தத்தில் பாட்டு கேட்பது போன்றவைகளில்) ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகை, பிரிவு 59-இன் கீழ், முன்பிருந்த ரூ.500லிருந்து தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், விதிகளை மீறும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சக பயணிகளின் பயண சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் செவியில் பொருத்திக் கொள்ளும் ஒலிபெருக்கியை பயன்படுத்துமாறும், மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டை தவிர்க்குமாறும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Metro Railway ,Chennai ,Chennai Metro Rail ,
× RELATED மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக...