×

ஆவடி, பொன்னேரி, பள்ளிப்பட்டு பகுதியில் ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 13.7 லட்சம் அதிரடி பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை

ஆவடி: அம்பத்தூர் அடுத்த பாடி - பார்க் ரோடு சந்திப்பில் அம்பத்தூர் தொகுதி நிலையான கண்காணிப்பு படை அதிகாரி மெர்சி அமலோபர்பவர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது, சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதியை சேர்ந்த கார்த்திக்(40) என்பவரது காரை தடுத்து நிறுத்தினர். சோதனையில்  காரில் 2,70,000 ரொக்கம்  இருந்தது. அந்த பணத்திற்கு அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது.  இதனையடுத்து அதிகாரிகள், கார்த்திக்கிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், நேற்று முன்தினம் அம்பத்தூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கேசவன் தலைமையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவின் பால் பண்ணை சாலையில் நடத்திய வாகன சோதனையில்,   காரில் கொண்டுவந்த சென்னை, நொளம்பூர், ஸ்ரீராம்நகரை சார்ந்த தனியார் கம்பெனி மேலாளர் சிவன்(52) என்பவரிடம் 67,800  இருந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம், அந்த பணத்திற்கு எவ்வித ஆவணங்களும் இல்லை. இதனையடுத்து, பறக்கும் படை அதிகாரிகள் சிவனிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர், மேற்கண்ட இரு அதிகாரிகளும் பறிமுதல் செய்த பணத்தை அம்பத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி விஜயகுமாரி மூலமாக அம்பத்தூர் தாசில்தார் பார்வதியிடம் ஒப்படைத்தனர். பிறகு, அவர் அந்த பணத்தை அம்பத்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார். மேலும் தேர்தல் அதிகாரிகள் கார்த்திக், சிவன் ஆகியோரிடம் நீங்கள் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு பெற்று செல்லலாம் என அறிவுரை கூறி அனுப்பினர். இதேபோல், ஆவடி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி மோகனரங்கன் தலைமையில் போலீசார் ஆவடி - பூந்தமல்லி சாலை, பருத்திப்பட்டு சோதனை சாவடியில் நேற்று முன்தினம்  வாகன சோதனையில் திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியை சார்ந்த  ரியல் எஸ்டேட் அதிபர் சங்கர்(31)  காரில் 1.5 லட்சம் இருந்தது தெரியவந்தது. அதற்கும் எவ்வித ஆவணமும் சங்கரிடம் இல்லை. இதனையடுத்து, அதிகாரிகள் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். பொன்னேரி:  பொன்னேரி பகுதியில் ரவி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பொன்னேரி தச்சூர் கூட்டு சாலை பகுதிகளில்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, செங்குன்றத்தில் இருந்து பொன்னேரி நோக்கி  சென்ற வாலிபரிடம்  சோதனை செய்தனர். அப்போது, அவர் வைத்திருந்த பையில் 5 லட்சம் இருந்தது.  பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர்,  பொன்னேரி உதவி தேர்தல் அலுவலர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். அந்த வாலிபர்,  நிதி நிறுவனத்துக்கு பணத்தை எடுத்து வந்ததாக ஆவணங்களை காட்டினார். ஆனால், அந்த ஆவணங்கள் உண்மையா என விசாரணைக்கு பின்புதான் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே  ஆந்திர எல்லை பகுதியில் நேற்று காலை  தேர்தல் பறக்கும் படையினர்   வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,  ஆந்திராவிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில்  உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ₹3.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சித்தூர் அருகே காணிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு பட்டு புடவைகள் வாங்க காஞ்சிபுரம் செல்வதாக தெரிவித்தனர்.

Tags : Avadi ,Ponneri, Pallipattu ,
× RELATED பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம்