×

கெங்கவல்லி அருகே கன்டெய்னரில் கொண்டு வந்த ₹36.5 கோடி தங்கம் பறிமுதல்

கெங்கவல்லி, மார்ச் 13: கெங்கவல்லி அருகே, உரிய ஆவணமின்றி கன்டெய்னரில் கொண்டு வரப்பட்ட ₹36.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 22 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் போன்றவற்றை வழங்குவதை தடுக்கும் நடவடிக்கையாக, உரிய ஆவணமின்றி ₹50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு சென்றாலோ, தங்கம் போன்றவற்றை கொண்டு சென்றாலோ பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த தலைவாசல் சுங்கச்சாவடி அருகே, நிலை கண்காணிப்பு குழு வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் எஸ்எஸ்ஐ ராமசாமி மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த மினி கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ₹36.5 கோடி  மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கன்டெய்னரில் வந்தவர்களிடம் விசாரித்த போது, சென்னையில் உள்ள பிரபல நகை கடையில் இருந்து, சேலத்தில் உள்ள அதன் கிளைக்கு நகைகளை கொண்டு வந்தது தெரியவந்தது. நகைகளை கொண்டு வருவதற்காக, அந்த நிறுவனம் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. ஆனால், முறைப்படி அனுமதி கிடைக்கும் முன்பாகவே, அந்த நகைகளை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கன்டெய்னருடன் ₹36.5 கோடி மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கெங்கவல்லி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Kengavalli ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்