×

பொற்பதிந்த நல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்

தா.பழூர், மார்ச் 13: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மாரியம்மன் கோயிலில் பால் குட திருவிழா நடைபெற்றது.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பக்தர்கள் பால்குடம் எடுப்பது வழக்கமாக வைத்துள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தால் ஆடி மாதம் கோயில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மாசி மாதம் சிவராத்திரியை முன்னிட்டு மாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெற்றது. பொற்பதிந்த நல்லூர் கிராமத்தில் உள்ள வளையூத்து ஏரியில் சக்தி கரகம் அலங்காரம் செய்யப்பட்டு நேர்த்திக்கடன் வேண்டியுள்ள பக்தர்கள் பால்குடம் அலங்காரம் செய்தனர். பின்னர் அங்கிருந்து மேளதாளத்துடன் பொற்பதிந்த நல்லூர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில் சுமார் 120 பால்குடம் எடுத்து பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.

இந்நிகழ்வில் நாயகனைப்பிரியாள், கோடங்குடி, சோழமாதேவி, அனைகுடம், இடையநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்த வந்தனர். கோயிலுக்கு வந்த அனைத்து பக்தர்களும் முககவசம் அணிந்து பால்குடம் எடுத்து வந்தனர்.பால் குடங்கள் அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு தீபாராதனை கட்டப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ஐந்து வகை சாதங்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாண்மைகள் மற்றும் கோயில் பூசாரி செல்லதுரை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Mariamman Temple Balkuda Festival ,Porpathintha Nallur ,
× RELATED செந்துறை அருகே மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா