ஈரோடு,ஜூலை8: ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலை மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் தோல் பதனிடும் தொழிற்சாலை மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவுநீர், அருகே இருக்கும் சாக்கடை கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கழிவு நீர் செல்ல உரிய கால்வாய்கள் இருந்தும் அதனை பராமரிக்க தவறியதால், குடியிருப்பு பகுதியில் குளம் போல கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்த சாக்கடை கால்வாயில் கொசு உற்பத்தி அதிகமாகி குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் முன்பு, கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என்றும் கால்வாயை தூர்வார வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து தினசரி கழிவுநீர், சாக்கடை கால்வாயின் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இறைச்சி துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகார் அளித்துள்ளோம். இருப்பினும், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனபோக்குடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே, சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். கால்வாயை தூர்வார வேண்டும். குறிப்பாக, தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, கால்வாயில் திறந்து விடுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
