×

வேலூர் கலெக்டர் அலுவலக குடோனில் இருந்து 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பி வைப்பு 24 மணி நேரமும் கேமராவில் கண்காணிப்பு

வேலூர், மார்ச் 12:5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் அனுப்பி வைத்தார். பாதுகாப்பு அறையில் கேமரா வைத்து 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட பரிசோதனை மேற்கொண்டு தயார் நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலக குடோனில் வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு மொத்தம் 3 ஆயிரத்து 77 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2 ஆயிரத்து 242 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகளும், 2 ஆயிரத்து 350 விவிபேட் கருவிகளும் குடோனில் வைக்கப்பட்டிருந்தது.இந்த வாக்குப்பதிவு கருவிகளை அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கும் பணி நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது டிஆர்ஓ பார்த்தீபன், ஆர்டிஓ கணேஷ், தேர்தல் பிரிவு தாசில்தார் ராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக தொகுதி வாரியாக பிரித்து அனுப்புவதற்காக ரேண்டம் முறை குலுக்கல் நேற்றுமுன்தினம் நடந்தது. வேலூர், காட்பாடி, அணைக்கட்டு தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களிலும், கே.வி.குப்பம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இங்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்படும். இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முந்தைய நாளான ஏப்ரல் 5ம் தேதி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Valor Collector Office ,Gudon ,
× RELATED புதர் மண்டி கிடக்கும் விற்பனை கூடம்