×

வேலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலம் ‘அரோகரா’ பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம்

வேலூர், மார்ச் 12:வேலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலங்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தது. அரோகரா முழக்கத்துடன் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவையொட்டி அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை முதலே ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். சிவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தி, இசை, பஜனை நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் திராளான பக்தர்கள் பங்கேற்று கண்டுகளித்தனர். அதேபோல் திருவலம் தனுமத்யம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோயிலில் திருவோணம் நட்சத்திரம் திருநாளான நேற்று மகா சிவராத்திரியையொட்டி காலை கோயில் மூலவர்கள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு வில்வம், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து மாலை கோயில் மூலவர் சன்னதி முன்பு உள்ள கொடிமரம் அருகே உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அபிஷேக விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், பால் போன்ற பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இரவு உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு நந்தி வாகனத்தில் கோயில் உட்புறத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதேபோல் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. இதில், அரோகரா முழக்கத்துடன் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து சிவாலயங்களில் சிவாரத்திரி விழா கோலாகலமாக வெகு விமர்சையாக நடந்தது.

Tags : Lord Shiva ,Shiva temples ,Vellore ,
× RELATED க.பரமத்தி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு