திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலில் ‘சீட்’ கிடைக்காததால் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலை, மார்ச் 12: திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு காத்திருந்த அதிமுக மாஜி மந்திரிகள் மற்றும் எம்எல்ஏக்கள் இலவு காத்த கிளியாக ஏமாற்றம் அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, செங்கம்(தனி), கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி(தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தில், அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் அதிமுகவும், 2 தொகுதிகளில் பாமகவும், ஒரு தொகுதியில் பாஜகவும் போட்டியிடுகின்றன.செங்கம் தொகுதியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நைனாக்கண்ணு, கலசபாக்கம் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ பன்னீர்செல்வம், போளூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆரணி தொகுதியில் சிட்டிங் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யாறு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ தூசி மோகன் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

அதிமுகவின் வெற்றி வாய்ப்புக்கு எப்போதும் சவாலாக உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் ஆகிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திட்டமிட்டு தள்ளிவிட்டதாக பரவலான பேச்சு உள்ளது.இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்து காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏக்கள் போளூர் ஜெயசுதா, கீழ்பென்னாத்தூர் அரங்கநாதன், வந்தவாசி குணசீலன், பெரணமல்லூர் அன்பழகன், செங்கம் சுரேஷ்குமார், ஆரணி பாபுமுருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் உள்ளிட்ட பிரமுகர்கள் கடும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் புதுமுகங்களை களம் இறக்கினார் ஜெயலலிதா. ஆனால், இந்த முறை புதுமுகங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே மாவட்டத்தில் 3 தொகுதிகள் கூட்டணிக்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்துள்ளனர்.

எனவே, சீட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ள மாஜி மந்திரிகள் மற்றும் மாஜி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தேர்தல்களத்தில் பணியாற்ற ஒருங்கிணைப்பது, அதிமுக வேட்பாளர்களுக்கு கூடுதல் சிக்கலையும், சிரமத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories:

>