×

தோகைமலை அருகே ஆர்.டி.மலை தெற்குதெருவில் இறந்த மூதாட்டியின் உடலை கொண்டு செல்ல பாதைபிரச்னை

தோகைமலை, மார்ச் 12: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி.மலை ஊராட்சி ஆர்டிமலை தெற்கு தெருவில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு புழுதேரி மெயின் ரோட்டில் இருந்து நத்தம் புறம்போக்கு நிலத்தில் பொதுபாதை செல்கிறது. குடியிருப்புகள் உருவானது முதல் பொதுபாதை சம்மந்தமாக பிரச்சனையும் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இந்தநிலையில் ஆர்டிமலை தெற்கு தெரு உருவானதில் இருந்து முதன் முதலாக அப்பகுதியில் வசித்து வந்த பஞ்சவர்ணம் (65) என்ற மூதாட்டி நேற்று இறந்து விட்டார். பஞ்சவர்ணத்தின் உடலை எடுத்து செல்வதற்காக பொதுமக்களும், உறவினர்களும் பொக்லைன் இயந்திரம் மூலம் பொதுபாதையை சரிசெய்ய முயன்றனர். அப்போது பொதுபாதை வழியாக இறந்தவரின் உடலை எடுத்து செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் ஆர்டிமலை பேருந்து நிறுத்தத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்டிமலை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னம்மாள் பாலமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சின்னையன், குளித்தலை டிஎஸ்பி சசீதர், விஏஓ தேன்மொழி, ஊராட்சி செயலர் செந்தில்குமார், துணை தலைவர் சாமிநாதன் ஆகியோர் சாலை மறியல் போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுபாதைக்காக போராடி வருகிறோம். சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என்று ஊராட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவிலலை. தற்போது அதிகாரிகளின் அலட்சியத்தால் இறந்தவரின் உடலை எடுத்து செல்வதற்குக்கூட பொதுபாதையில் வழிவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது வேதனை அளிக்கிறது என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதைகேட்டறிந்த அதிகாரிகள் உடலை எடுத்துச்செல்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து பொக்லைன் இயந்திரம் மூலம் பாதையை சரிசெய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் வருவாய்துறை சார்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்டு சாலைமறியல் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். இதனால் திருச்சி-தோகைமலை சாலையில் காலை 11 மணிமுதல் 12 மணிவரை 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Tags : RD Hill South Street ,Tokaimalai ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...