×

வேதாரண்யம் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் குடோனுக்கு கொண்டு செல்லப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

வேதாரண்யம், மார்ச் 12: வேதாரண்யம் பகுதி நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை குடோனுக்கு கொண்டு செல்ல வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்வேதாரண்யம் தாலுகா ஆதனூர், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், தென்னடார், பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் கடந்த 10 நாட்களாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. சம்பா நெல் சாகுபடி செய்து அறுவடை நேரத்தில் பலத்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்து விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஓரளவு காப்பாற்றப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்றால் ஏற்கனவே கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.

கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை எடுக்க லாரிகள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் ஒன்று அல்லது இரண்டு லாரிகள் தான் வருகின்றன. இதனால் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 5,000 முதல் 10,000 நெல் மூட்டைகள் வரை தேங்கி கிடக்கின்றன. நெல் மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள மூட்டைகளை உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து வாங்கிய கடனை அடைக்கலாம் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் நெல் வைப்பதற்கு விவசாயிகள் 3 முதல் 5 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை குடோனுக்கு லாரிகளில் எடுத்து செல்ல வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vedaranyam ,Gudon ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்