×

வேட்பு மனு தாக்கல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

அரியலூர், மார்ச் 12: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வேட்பு மனு தாக்கல் நடைமுறைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ேதர்தல் அலுவலர், கலெக்டர் ரத்னா தலைமையிலும், எஸ்பி., பாஸ்கரன் முன்னிலையிலும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ரத்னா தெரிவித்ததாவது: நாளை (இன்று) 12ம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் துவங்கி 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20ம் தேதி அன்றும், வேட்பு மனுக்களை திரும்ப பெற வேண்டிய கடைசி நாள் 22ம் தேதி அன்றும், வாக்குப்பதிவு ஏப்.6ம் தேதி அன்றும், வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி அன்றும் நடைபெறவுள்ளது.

நாளை (இன்று) முதல் நடைபெறவுள்ள வேட்பு மனுத்தாக்கலின்போது வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி நேரடியாக வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இணையதளம் மூலமாக வேட்பு மனு தாக்கல் செய்து அதனை பதிவிறக்கம் செய்து நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். வேட்பு மனுதாக்கல் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை வேலை நாட்களில் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெறப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்களுடன் 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்கு 100 மீ. எல்லை வரை 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

வேட்பாளர் படிவம் 26ல் ரூ.20க்கான பத்திரத்தில் உறுதிமொழி தாக்கல் செய்ய வேண்டும். படிவம் 26ல் அனைத்து இனங்களும் விடுபடாமல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் முடிவு பெற்றவுடன், வேட்பு மனு பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல், சரிபார்ப்பு பட்டியல், வைப்புத்தொகை பெறப்பட்டதற்கான ரசீது, உறுதிமொழி எடுத்துக்கொண்டதற்கான ஒப்புதல், தேர்தல் செலவு கணக்கு பதிவேடு, இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிவுரைகளின் நகல்கள் ஆகியவை வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பவடிம் யு மற்றும் டீஐ வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய நாளில் தாக்கல் செய்யப்படவில்லை எனில் வேட்பு மனுதாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளான வரும் 19ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.எனவே, அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரநிதிகள் ேதர்தல் நடத்தை விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேர்தல் சுமூகமான முறையில் நடத்திட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது