×

புதுகை கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் சேவை மையம் செயல்படும்

புதுக்கோட்டை, மார்ச் 12: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் சேவை மையம் செயல்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரி கூறினார்.புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தை கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான உமா மகேஸ்வரி நேற்று துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் வாக்காளர்களுக்கு உதவி செய்யும் வகையில் வாக்காளர் சேவை மையங்கள் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரின் மாவட்ட ஆட்சியரகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதில் வாக்காளர்கள் தங்களுடைய வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டையின் விபரங்களை தெரிவித்தால் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இடம் பெற்றுள்ள விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சரிபார்த்து கொள்ளலாம்.

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் பட்டியல் குறித்த விபரங்கள் அறிய கலெக்டர் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இதற்கு வரும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு பொதுமக்களின் தேவைகள், சந்தேகங்கள் மற்றும் புகார்கள் தீர்க்கப்பட்டு வருகிறது. இதை கண்காணிக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். எனவே பொதுமக்கள் இந்த வாக்காளர் சேவை மையத்தை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Voter Service Center ,
× RELATED கலெக்டர் அலுவகத்தில் வாக்காளர் சேவை மையம் நாளை திறப்பு