×

மணப்பாறை அருகே விபத்தில் 2 பெண்கள் பலி நிவாரணம் வழங்கக்கோரி 2வது நாளாக மக்கள் மறியல்

மணப்பாறை, மார்ச்12: மணப்பாறை அருகே விபத்தில் பலியான பெண்களுக்கு நிவாரணம் கேட்டு இரண்டாவது நாளாக ம்க்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பளுவஞ்சி மற்றும் கோட்டை பளுவஞ்சியை சேர்ந்த போதும்பொண்ணு மற்றும் தங்கமணி ஆகிய 2 பெண்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முக்கன்பாலம் அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளான கார் மோதிய விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, விபத்தில் இறந்தவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி இ இரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், உறவினர்கள் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சடலங்களை எடுக்கவிடாமல் தடுத்து சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். பின் ஒப்பந்தகாரர் உரிய நிவாரணம் வழங்குவதாக கூறியதையடுத்து வருவாய்த்துறை, மற்றும் காவல்துறையினரின் சமசரத்தில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் வரை உறுதியளித்த நிவாரணம் அளிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஊர்மக்கள் உடற்கூராய்விற்கு ஒத்துழைக்காமல் மீண்டும் மாலை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கல்லாமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற திருச்சி எஸ்பி ராஜன், மருங்காபுரி வருவாய் வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், மணப்பாறை டிஎஸ்பி பிருந்தா ஆகியோர் உரிய நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் சாலை மறியலால் இரண்டாவது நாளாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமரசத்தைத்தொடர்ந்து போதும்பொண்ணு மற்றும் தங்கமணி ஆகியோரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

Tags : Manapparai ,
× RELATED மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில்...