×

மூன்றரை சவரன் நகையை இழந்த எஸ்ஐ மகன் போலீஸ் என கூறி காதல் ஜோடியிடம் வழிப்பறி: போலி போலீசாருக்கு வலை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே காதல் ஜோடியிடம் போலீஸ் என கூறி நகை பறித்த மர்மநபர்களை போலீசார், வலைவீசி தேடி வருகின்றனர். இதில், நகை பறி கொடுத்தவர், எஸ்ஐ மகன் என்பது பெரும் அதிர்ச்சியானது.கேளம்பாக்கம் அடுத்த கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியில் எஸ்ஐயாக வேலை பார்க்கிறார். இவரது மகன் தவான் (24). நேற்று காலை தவான், தனது காதலியுடன் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டார்.
தேவனேரி அருகே சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, 2 பேரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள், தங்களை போலீஸ் என்றும், மைனர் பெண்ணை கடத்தி வந்ததாக புகார் வந்துள்ளது. எஸ்ஐ அழைத்து வரச்சொன்னார் என கூறியுள்ளனர். மேலும், அவர்களை,  தங்களது பைக்கை பின் தொடர்ந்து வருமாறு கூறியுள்ளனர்.

இதனால் பயந்து போன காதல் ஜோடி, அவர்களை பின் தொடர்ந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நெம்மேலி சாலை வழியாக திருப்போரூர் வந்த அவர்கள், தெற்கு மாடவீதியில் காரை நிறுத்தி காவல் நிலையம் வாருங்கள் என்று கூறியுள்ளனர். காவல் நிலையத்துக்குள் நகைகளுடன் சென்றால், போலீசார் திட்டுவார்கள் என கூறிய அவர்கள், தவானிடம் இருந்து நகைகளை கழற்றி உடன் வந்த பெண்ணிடம் கொடுக்க சொன்னார்.இதை நம்பி திவானும், மூன்றரை சவரன் தங்க செயினை கழற்றி கொடுத்து விட்டு, அவர்களுடன்  பைக்கில் சென்றார். திருப்போரூர் பஸ் நிலையத்தில் எஸ்ஐ வாகன சோதனையில் உள்ளார் என கூறி அங்கே அழைத்து சென்று, தவானை பஸ் நிலையம் அருகே நிற்க வைத்தனர். இங்கு எஸ்ஐ வந்து உன்னை சந்திப்பார் என கூறி, அவர்கள் சென்றனர்.

அங்கிருந்த இளம்பெண்ணிடம், தவானிடம் போலீசார் விசாரிக்கின்றனர். செயினை வாங்கி வரச் சொன்னார்கள் என கூறி, அந்த பெண்ணிடம் இருந்து நகை வாங்கி சென்றனர். நீண்ட நேரமாக பஸ் நிலையம் அருகே காத்திருந்த தவான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நடந்த சம்பவங்களை திருப்போரூர் போலீசில் புகாராக அளித்தார். திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து போலீஸ் போல் நடித்து காதல் ஜோடியிடம் நகை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு