×

அமைச்சர் பதவி, கேட்கும் இலாகா, ரூ.50 கோடி..! தவெக-வின் ஆஃபர் – 2 திமுக MLA-க்களிடம் குதிரை பேரம்…

சென்னை: தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் புகார் அளித்து உள்ளனர்.

திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை மூலம் மிரட்டியது குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் ஆளுநரை வலியுறுத்தி உள்ளனர். அர்லேக்கரைச் சந்தித்த பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரைச் சந்தித்து விளக்கினோம்.

ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இரண்டு பேர் அமைச்சர்களைவிட அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அரசின் எல்லாக் கூட்டங்களிலும் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகிறார்கள். இப்படி ஒரு கேவலமான சூழ்நிலை இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இது குறித்தும் ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறோம். இந்த புகாரை நாங்கள் சொன்ன போது “ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இருவர் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பது தவறு என்பதை ஆளுநரே ஒப்புக்கொண்டார். ‘அப்படியென்றால் அவர்களை அமைச்சராக்கி, அமைச்சரவையில் பங்கேற்க வைக்க வேண்டியது தானே?’ என ஆளுநரே கேள்வி எழுப்புகிறார்.” எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை அவர் எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, அவதூறு வழக்குகளில் கைது என்பது இதுவரை நடந்ததே இல்லை. திமுக-வை அச்சுறுத்தி பார்க்கவே அவரை தேவையேயின்றி கைது செய்து உள்ளனர். தவெக வெளிப்படையாகவே குதிரை பேரத்தில் ஈடுபட்டு உள்ளது. தவெகவில் சமீபத்தில் இணைந்த சி.விஜயபாஸ்கரும் கூட அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியனிடம் குதிரை பேரம் செய்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.

நாகர்கோவில் திமுக எம்எல்ஏ-வான ஆஸ்டினிடம், தவெக தரப்பினர் அமைச்சர் பதவி தருவதாகவும், நீங்கள் கேட்கும் இலாகா தருகிறோம் எனவும் பேரம் பேசியுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும்படியும் பேரம் பேசி இருக்கிறார்கள். அதோடு வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ சீனிவாசனிடம் ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசியுள்ளனர் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து நாங்கள் உரிய ஆதாரத்துடன் ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளோம் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக-வின் இந்த குதிரைபேர புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags : Tavega ,Dimuka ,Chennai ,Dimuka Organization ,R. S. Major ,Bharati ,Dimuka Law Department ,Bharandaman ,M. L. A. Anita ,
× RELATED ஒரு சில இயக்கங்களால் ஒரு...