×

செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை; மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி சபதம்

சென்னை: செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தற்கு பிறகு, இனிஅதிமுகவில் இருந்தால் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதாலும், பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். இதுவரை 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் அதிமுக வளர்ச்சி பணிகளில் மகளிரணியின் பங்கு குறித்த ஆலோசனை கூட்டம், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் படுதோல்வி மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். நேற்று காலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடனும், மாலையில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகளின் விலகல் மற்றும் கட்சியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விவாதித்தார்.

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
மதுராந்தகம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மரகதம் குமரவேலுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா எம்பி பதவி உள்பட பல பதவிகளை கொடுத்தார்.

கடந்த 2021, 2026 தேர்தலில் அவருக்கு மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரை அதிமுக தொண்டர்கள் வெற்றி பெற வைத்தனர். ஆனால், அந்த நன்றியை மறந்து, அதிமுக தொண்டர்களின் உழைப்பை பயன்படுத்தி வெற்றிபெற்ற அவர், இன்று தவெகவில் இணைந்து விட்டார். அதனால், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். எல்லோருக்கும் உரிய பங்களிப்புடன், உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும். கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்கள் போகட்டும். தொண்டர்கள் இருக்கும் கட்சி அதிமுக. அவர்கள் நமக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர். இன்று திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இதனிடையே கோவை, கரூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதிமுகவில் இருந்து பலரும் விலகி தவெகவில் இணைந்து வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags : CHENGALPATTU ,VELOOR DISTRICT ,MADURANTHAGAM ,EDAPPADI PALANISAMI SABATHAM ,Chennai ,Edapadi Palanisami ,Vellore ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...