×

இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் விஜயபிரபாகரன் பேச்சு

சிதம்பரம், மார்ச் 11: அதிமுகவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என சிதம்பரத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தேமுதிக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில், 10 வருடமாக அதிமுக ஆட்சியில் இருப்பதற்கு தேமுதிகதான் காரணம். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சொன்னது போல் பழம் நழுவி பாலில் விழுந்து இருந்தால், இன்றைக்கே அதிமுக என்ற இயக்கமே இருந்திருக்காது. கடந்த தேர்தலில் அதிமுக வெற்றிக்கு வெறும் ஒரு சதவீத வாக்குகள்தான் காரணம். வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் இதுதான். நீங்கள் ஆட்சிக்கு வர காரணமே நாங்கள்தான். மக்கள் நல கூட்டணியில் கட்சிக்காரர்கள் இன்னும் உழைத்து இருந்தால் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம். அந்தக் கூட்டணியில் இருந்தபோது நமது வாக்கு சதவீதம் குறைவாக இருந்ததால்தான் தற்போது அதை கணக்கு வைத்துக்கொண்டு கூட்டணி பேரம் பேசுகிறார்கள்.நாங்கள் தனித்துப் போட்டியிடவும் தயாராகத்தான் இருக்கிறோம். எதிரிகளை வீழ்த்துவோம் என கூறி நாம் விழுந்து விடாமல் களப்பணி ஆற்ற வேண்டும்.

எனவே வருகிற 6ம் தேதி நமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். 2006ல் மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி என கேப்டன் அறிவித்தார். அதுபோல தற்போது நிகழ ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. மக்களுக்கு 40 வருடமாக விஜயகாந்த் சேவை செய்து வருகிறார்.  தமிழகத்திற்கு நாங்கள் நல்லதை செய்து விட்டுத்தான் ஓய்வோம். பாமக, பாஜகவை விட ஏன் எங்களை குறைத்து எடை போடுகிறீர்கள். நாங்கள் எதிர்க்கட்சியாகவும் அமர்ந்திருக்கிறோம். 10 சதவீதம் வாக்கும் பெற்று இருக்கிறோம். எடப்பாடிக்கு  எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல நினைப்பு. நாங்கள் காலில் விழ தயாராக இல்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜயகாந்த் வந்தால்தான் ஜெயிக்க முடியும் என கூப்பிட்டார்கள்.  விஜயகாந்த் உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர் மீண்டும் மக்கள் முன் வந்து நிற்பார். எங்கிருந்தாலும் வாழ்க என ஜெயக்குமார் வாழ்த்தினார். நிச்சயமாக நாங்கள் வளர்வோம். மீண்டும் அதிமுகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம். நாங்கள் அதிமுக தொண்டர்களையோ, அமைச்சர்களையோ விமர்சனம் செய்யவில்லை எடப்பாடி பழனிச்சாமியைதான் விமர்சனம் செய்கிறோம். இவ்வாறு பேசினார்.

Tags : AIADMK ,Vijay Prabhakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி