×

வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைகிறது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


காட்டுமன்னார்கோவில், மார்ச் 11: காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரிக்கு தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரும். இது தவிர அரியலூர் மாவட்ட எல்லை கிராமங்களில் பெய்யும் மழைநீர் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை மற்றும் பாப்பாக்குடி ஓடை ஆகியவைகளின் வழியாக ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி. இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசனம் பெறுகின்றன. மேலும் புதிய வீராணம் திட்டம் மூலம் சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 16 கன அடியில் இருந்து நீர் இருப்பிற்கு ஏற்றாற்போல் 260 கன அடி வரை அனுப்பப்படுகிறது.
இதுதவிர சுமார் 500க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர்களின் குடும்பத்துக்கு வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியிலும், 2020ம் ஆண்டும் சரியான காலத்தில் தண்ணீர் வரத்து இருந்த காரணத்தால், ஏறக்குறைய கடந்த 2 ஆண்டுகளில் வீராணம் ஏரி 8 முறை முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தற்போது ஏரி படிப்படியாக வற்றி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 40.06 அடியாக குறைவாக உள்ளது. உருத்திரசோலை அருகே உள்ள ஜீரோ பாயிண்ட் அணையில் இருந்து பொதுப்பணித்துறை நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றி வருவதால் அடுத்த 20 நாட்களுக்குள் ஏரி முழுவதும் வறண்டு விடும். இதனால் எதிர்வரும் கோடையில் காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து  குடிநீர் பஞ்சம் ஏற்படுவதுடன், சென்னைக்கு குடிநீர் அனுப்புவதிலும் இயலாத அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Veeranam Lake ,
× RELATED சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி...