திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகவல்லி(42). இவருக்கும், மற்றொரு தரப்பிற்கும் இடையே செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழில் தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் திருவாடானை பஸ் நிலையத்தில் வைத்து நாகவல்லியையும், அவரது மகனையும் எதிர்தரப்பினர் உருட்டுக்கட்டைகளுடன் ஓட ஓட விரட்டித் தாக்கினர். தாக்குதலுக்குப் பயந்து இருவரும் அலறியடித்தபடி ஓடியபோது, ஆத்திரமடைந்த கும்பல் அவர் மீது கட்டைகளை வீசி எறிந்தது.
அப்போது, அங்கு டூவீலரில் நின்றிருந்தவர் மீது அந்தக் கட்டை விழுந்த நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நாகவல்லி, திருவாடானை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட வினோத்குமார், சதீஷ்குமார் மற்றும் மணிரத்தினம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
