×

பெண் ஆய்வாளர் கொடுத்த புகாரை வாங்காமல் தட்டி கழிக்கும் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர்: பெரவள்ளுர் காவல் நிலையத்தில் சலசலப்பு

பெரம்பூர்: பெரம்பூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் தனது கணவர் ராஜேந்திர பிரசாத்(30) மீது பெரவள்ளுர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் கடந்த 5 வருடங்களாக தனது கணவர் தன்னை பிரிந்து வேறொரு பெண்ணுடன் வசித்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அம்பிகா இருவரையும் நேரில் அழைத்து விசாரணை செய்தார். மேலும் இரு தரப்பிலிருந்தும் வழக்கறிஞர்கள் வந்ததால் இதை கோர்ட்டில் பார்த்துக்கொள்வதாக கூறி சென்றனர். இந்நிலையில், ராஜேந்திர பிரசாத் தனது மனைவிக்கு போன் செய்து பெண் இன்ஸ்பெக்டர் குறித்து ஆபாசமாக திட்டி பேசியுள்ளார். மேலும் தனது மனைவியையும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண் தனது கணவர் பேசிய ஆடியோ பதிவுகளை கொண்டுவந்து இன்ஸ்பெக்டர் அம்பிகாவிடம் காட்டியுள்ளார்.

இதை கேட்ட அவர் இதுகுறித்து பெரவள்ளுர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணியிடம் புகார் கொடுத்தார். ஆனால் ஆடியோ ஆதாரம் வைத்து புகாரை ஏற்க முடியாது என சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் ஆடியோ பதிவை கொண்டு வந்தவர்கள் மீதும் வழக்கு போடுவேன் என இன்ஸ்பெக்டர் கூறியதாகவும் தெரிகிறது. மகளிர் இன்ஸ்பெக்டர் அம்பிகா, “நீங்கள் நடவடிக்கையே எடுக்க வேண்டாம். விட்டுவிடுங்கள்” என கூறி சென்றுவிட்டார். ஒவ்வொரு மகளிர் காவல் நிலையங்களிலும் குடும்ப பஞ்சாயத்து பேசும்போது இதுபோன்று மகளிர் இன்ஸ்பெக்டர்களை தரக்குறைவாக பேசுவதும், அவர்களை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் புகார் கொடுத்தால் அதன் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கையும் எடுப்பதில்லை.

Tags : Peravallur Police Station ,
× RELATED பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்