காரைக்குடி, ஜூலை 2: காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடியில் இருந்து அனைத்து தேவைகளுக்கும் பொதுமக்கள், வர்த்தகர்கள் மதுரைக்கு அதிக அளவில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடர் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் பெரிய அளவிலான நோய் தாக்கம் உள்ளவர்கள் மதுரையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுகின்றனர். தவிர மதுரையில் எய்ம்ஸ் அமையும் பட்சத்தில் உயர்தர சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மொத்த மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் நடத்துவர்கள், காய்கறி வியாபாரிகள், பூ விற்பனை செய்பவர்கள் என அனைவரும் மதுரைக்கு தான் பெரும்பாலும் செல்கின்றனர். காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க ஆய்வுகள் முடிந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு ரயில் இயக்கும் பட்சத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனாக இருக்கும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள், வணிகர்கள் கூறுகையில், காரைக்குடியில் இருந்து மதுரைக்கு பஸ்சில் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகிறது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்ண்டாண்ட் வரை செல்வதால் மீண்டும் நகருக்குள் செல்ல கூடுதலாக ஒரு மணி நேரம் ஆகிறது. தவிர காரைக்குடியில் இருந்து மானாமதுரை வழியாக மதுரைக்கு ரயில் இயக்கப்படும் நிலையில் குறைந்த கட்டணமே வாங்கப்படும். ரயிலில் செல்வோர் மதுரை மாநகருக்குள் செல்ல வாய்ப்புள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு தினசரி இரண்டு முறை ரயில் விடுவதை போல் காரைக்குடியில் இருந்தும் மதுரைக்கு இரண்டு முறை விடும் பட்சத்தில் பலர் பயன் பெறுவார்கள். பஸ் பயணநேரமும் ரயில் பயணநேரமும் ஒன்றாகவே இருக்கும். காரைக்குடியில் இருந்து தினமும் மதுரைக்கு பஸ்சில் 1000க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர். எனவே காரைக்குடியில் இருந்து சிவகங்கை, மானாமதுரை வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டும் பயனற்ற நிலையே உள்ளது என்றனர்.
