திருவாடானை, ஜூலை 2: திருவாடானை அருகே பயன்பாடின்றி முட்புதர்கள் மண்டியதால் சேதமடைந்த வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே பாரதி நகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அலுவலர்கள் குறைந்த வாடகையில் குடியிருக்கும் வகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 3 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளையும் முறையாக பராமரிக்காததால் குடியிருப்பு கட்டிடங்களைச் சுற்றி முட்புதர்கள் மண்டி சேதமடைந்ததால் இந்த குடியிருப்பு வீடுகளை விட்டு இங்கு குடியிருந்த அரசு அலுவலர்கள் காலி செய்து விட்டனர்.
இந்நிலையில் இந்த மூன்று அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும் பயன்பாடற்று முட்புதர்கள் மண்டியதால் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த குடியிருப்பு வீடுகளில் குடியிருந்த அரசு அலுவலர்கள் இதே பகுதிகளில் வாடகைக்கு வீடு கிடைக்காமல் தொண்டி, தேவகோட்டை, காரைக்குடி போன்ற நகர்ப்புறங்களில் அதிக வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வருவதோடு தினசரி பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பயண நேரம் அதிகரிப்பதால் வீண் அலைச்சலுக்கு உள்ளாவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்து பயனற்ற நிலையில் காட்சி பொருளாக காட்சியளிக்கும் மூன்று அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை உடனடியாக அகற்றிவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டித்தந்து அரசு அலுவலர்கள் குறைந்த வாடகையில் குடியிருக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்: இந்த திருவாடானை பகுதியில் வருவாய்த்துறை, நீதித்துறை, பத்திரப் பதிவுத்துறை, கால்நடை மருந்தகம், அரசு தாலுகா மருத்துவமனை, பொதுப்பணித்துறை, கருவூலம், புள்ளியியல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
வெளியூர்களில் இருந்து பணியிடை மாறுதலாகி இங்குள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களின் நீண்ட தூர பயணத்தை தவிர்த்து வீண் அலைச்சலை குறைப்பதற்காக குறைந்த வாடகையில் இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் குடியிருந்து வந்தனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களைச் சுற்றி முட்புதர்கள் மண்டியதாலும், இதனால் இந்த 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களும் மிகவும் சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளதாலும் இந்த வீடுகளில் குடியிருக்க முடியாத சூழல் நிலவியது.
இதனால் இப்பகுதியில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் சுமார் 20 முதல் 30 கிலோமீட்டர் தூரமுள்ள நகர்ப்புறங்களில் அதிக வாடகைக்கு குடியிருந்து வருவதால், தினசரி அலுவலகம் சென்று வீடு திரும்பும் பயணநேரம் அதிகரிப்பதோடு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இந்த சேதமடைந்த வீட்டு வசதி வாரிய மூன்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு, புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்டித் தந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனக் கூறினர்.
