×

கடமலை மயிலை ஒன்றியத்தில் 20 நிமிடத்திற்கு ஒருமுறை மின்வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வருசநாடு, மார்ச் 11: கடமலை மயிலை ஒன்றியத்தில் 20 நிமிடத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டை சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடமலை மயிலை ஒன்றியத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் விவசாயமே முதன்மை தொழிலாக உள்ளது. இதில் பெரும்பாலான கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து மின்வெட்டு செய்யப்பட்டு வருகிறது. 20 நிமிடத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் என மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற தொடர் மின்வெட்டு காரணமாக விவசாயிகள் பயிர்களுக்கு முழுமையாக நீர்பாய்ச்ச முடியவில்லை. எனவே விவசாயிகள் இரவு வெகுநேரம் வரை பயிர்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல தொடர் மின்வெட்டு காரணமாக வீடுகளில் குழ ந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வருசநாடு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் 20 நிமிடத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இரவு மாணவர்கள் வீட்டுப் பாடங்கள் பயிலும் போதும் மிகவும் சிரமத்தில் உள்ளார்கள். கிராமத்தில் முதியவர்கள் நிலைதடுமாறி விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது. விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனை சரி செய்து தேனி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

Tags : Katamalai Peacock Union ,
× RELATED கடமலை மயிலை ஒன்றியத்தில்...