சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு வசூல் கலெக்டரிடம் திமுக புகார்

சிவகங்கை, மார்ச் 11: சிவகங்கை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்பு கொடுப்பதற்கு வீட்டு உரிமையாளர்களிடம் பல ஆயிரம் வசூல் நடப்பதாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரூ.23.5 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007 மார்ச்சில் தொடங்கப்பட்டன. ரூ.23.5 கோடியில் இதற்கான பணிகள் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்யப்பட்டது. கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்பு பணிகள், ஆள் நுழைவு தொட்டிகள், கழிவுநீர் போக்கு குழாய்கள், வீட்டு இணைப்புக்கான குழாய் அமைக்கும் பணிகள், கழிவு நீரேற்று நிலையம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன. ஒப்பந்தப்படி 2009ல் பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் மூன்றாம் கட்ட பணியான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை பயன்படுத்துவது உள்ளிட்டவைகளுக்கான பணி முடிவடைவதில் தொய்வு ஏற்பட்டதால் பணிகள் முடிவடையாமல் இழுபறி நீடித்தது. சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தொடர்பான பிரச்சினை கடந்த 2015ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது வரை திட்டப்பணிகள் முழுமையடைந்து செயல்பாட்டிற்கு வரவில்லை.

இந்நிலையில் தனியார் நிறுவனம் சார்பில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தபட்சம் ரூ.5ஆயிரத்திலிருந்து ரூ.10ஆயிரம் வரை வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. திமுக நகர் செயலாளர் துரைஆனந்த் கூறியதாவது: ஒவ்வொரு வீட்டிலும் ஏன் வசூல் செய்து வருகிறீர்கள் எனக் கேட்டால் ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு, அரசு அதிகாரிகளுக்கு, நகராட்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் நாங்க கொடுத்து தான் ஒர்க் ஆர்டர் பெற்றோம். அதற்கு தான் வசூல் செய்கிறோம் என்கின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் எந்த அரசு வேலைகளும் நடைபெற கூடாது என்பது விதி. இதை தடை செய்ய வேண்டும். வீடுகளில் வாங்கிய பணத்தை உடனே ஒப்படைக்க வேண்டும். சிவகங்கை நகரில் குடிநீர் வழங்கல் தவிர எந்த ஒரு அரசு சார்ந்த வேலைகளை அனுமதிக்க கூடாது. இது குறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.

Related Stories:

>