சாமி கும்பிடுவதில் பிரச்னை கோர்ட் உத்தரவால் கோயிலுக்கு பூட்டு திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம், மார்ச் 11: திருமங்கலத்தில் இரு சமூகத்தினருக்கிடையே சாமி கும்பிடுவதில் எழுந்த பிரச்னையால் நீதிமன்ற உத்தரவுபடி அறநிலையத்துறை அதிகாரிகள் கோயிலை பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை திருமங்கலம் கக்கன் காலனி ஓடை பகுதியில் அமைந்துள்ளது ஆதிசிவலிங்கம் மற்றும் காட்டுகருப்பணசாமி கோயில். கடந்த பல ஆண்டுகளாக இருசமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்தநிலையில் குறிப்பிட்ட இரு சமூகத்தினரிடம் கோயிலில் தங்களது சமூதாயத்தினரை சேர்ந்தவரை அர்ச்சகராக நியமிக்கவேண்டும் என்று ஏற்பட்ட மோதலால் பிரச்னை உண்டானது. இருதரப்பினரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடவே, தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சிவராத்திரியையொட்டி கோயிலில் ஒரு சமுதாய மக்கள் கோயிலில் சாமி கும்பிட நேற்று ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மற்றொரு தரப்பினர் இது குறித்து நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடந்தது. இதையடுத்து மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து திருமங்கலம் மீனாட்சிசொக்கநாதர் கோயிலின் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருமங்கலம் போலீசார் கோயில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர். கோயிலுக்கு வந்த அறநிலையத்துறையினர் கோயில் வளாகத்தில் இருந்தவர்களை வெளியேற்றி கோயிலை பூட்டி நோட்டீஸ் ஒட்டினர். இதனைக் கண்ட சிவராத்திரி சாமி கும்பிடவந்திருந்த ஒரு சமுதாய மக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறநிலையத்துறையினரிடம் கேட்ட போது,`` கோயிலின் சாவி தங்களிடம் இருக்கும். தாங்கள் நியமிக்கும் பூசாரியை கொண்டு சிவராத்திரி பூஜை நடைபெறும் அனைவரும் கலந்து கொள்ளலாம்’’ என்றனர்.

Related Stories:

>