×

இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் விபி ஜி ராம்ஜி திட்டம்

 

தர்மபுரி, ஜூலை 1: தர்மபுரி மாவட்டத்தில் இன்று(1ம் தேதி) முதல் ஊரக பகுதிகளில் விபி ஜி ராம்ஜி திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காகவும் விபி ஜி ராம்ஜி ஆக்ட் -2025 என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் தொடர்ச்சியாக இன்று(1ம் தேதி) முதல் ஊரக பகுதிகளில் செயல்பாட்டுக்கு வரும் விபி ஜி ராம்ஜி திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பயன்கள் கிடைக்கும் என தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இப்புதிய திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 125 நாட்கள் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. வேலை செய்ததற்கான ஊதியம் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படாவிடில், அதற்கான தாமத ஊதிய இழப்பீடு சட்டப்படி வழங்கப்படும்.விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை வழங்காத பட்சத்தில், பயனாளிகளுக்கு தகுந்த வேலையின்மை உதவித்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நேரடிப் பயன் பரிமாற்றம் மற்றும் நிதி வெளிப்படைத்தன்மை 100 சதவீதம் ஆகும். இடைத்தரகர்கள் இல்லாத பரிமாற்றமாக இருக்கும். பயனாளிகளின் ஊதியம் மற்றும் இதர நிதியுதவிகள் அனைத்தும் எவ்வித நிர்வாகத் தாமதமுமின்றி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடி பயன் பரிமாற்றம் முறையில் செலுத்தப்படும்.

இதனால் இடைத்தரகர்களின் இடையூறோ, ஊதியம் பெறுவதில் குறைபாடோ இருக்காது. நிதி நேரடியாகக் கிராம ஊராட்சி கணக்குகளுக்கும், பயனாளிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதால் உள்ளாட்சி அமைப்புகள் கூடுதல் நிர்வாகத் தன்னாட்சியைப் பெறுகின்றன.வெறும் வேலைவாய்ப்பாக மட்டும் இல்லாமல், கிராமப்புறங்களில் நீண்டகாலம் நிலைத்து நிற்கக்கூடிய நீடித்த வாழ்வாதாரச் சொத்துக்களை உருவாக்குவதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள், பெண்கள் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரம் மேம்பட்டு, நகர்ப்புறங்களை நோக்கிய இடப்பெயர்வு பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.

மேலும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர், திருநங்கைகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு தனி ஊதிய விகிதங்கள் மூலம் ஊதியம் கணக்கிடப்படுவதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். மேலும், நீர் பாதுகாப்பு பணிகள், அடிப்படை ஊரக கட்டமைப்பு பணிகள், ஊரக வாழ்வாதாரப் பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மொத்தம் 318 வகையான பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dharmapuri District Rural Development Agency ,Ruban Sankar Raj ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...