×

மைனலை மட்டம்-கிட்டட்டி சாலையை சீரமைக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

ஊட்டி,  மார்ச் 11:  மைனலை மட்டம் முதல் கிட்டட்டி வரை பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு பாலகொலா கவுன்சிலர் கடிதம் அனுப்பியுள்ளார். பாலகொலா ஊராட்சி தேனாடு கவுன்சிலர் ராஜேஷ்வரி மாநில தேர்தல் ஆணையாளருக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊட்டி அருகேயுள்ள மைனலை மட்டம்,  கிட்டட்டி மட்டம், தேனாடு, மைனலை ஆகிய கிராமங்கள் பாலகொலா  ஊராட்சிக்குட்பட்டது. இந்த கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக ஊட்டி -  மஞ்சூர் சாலை சந்திப்பில் இருந்து கிட்டட்டி கிராமம் வரை சுமார் 3 கி.மீ.  தூரம் உள்ளது. இச்சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை  சீரமைக்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக கிராம மக்கள் வலியுறுத்தி வந்ததன்  பேரில், இக்கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க பாலகொலா ஊராட்சியில்  நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே  நிதி ஒதுக்கப்பட்டு, பணி ஆணையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால்,  பாலகொலா பஞ்சாயத்து நிர்வாகம் இச்சாலையை சீரமைக்காமல் உள்ளது. மேலும்,  சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னரே சீரமைக்கப்படும் என தெரிவித்து  வருகின்றனர். தேர்தலுக்கு முன்னரே பணி ஆணைகள் கிடைத்த நிலையில், இச்சாலையை  அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், வாக்குச்சாவடி மையங்களுக்கு  செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் வாக்களிக்க செல்ல  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையம் முறையாக விசாரணை  மேற்கொண்டு இச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அந்த கடிதத்தில் கவுன்சிலர் ராஜேஷ்வரி கூறியுள்ளார்.

Tags : Election Commission ,Mine Level ,Road ,
× RELATED அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்!