×

புதுக்கோட்டை அருகே பயங்கரம்; ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் 9 வயது சிறுவன் நெரித்து கொலை: பிளஸ் 2 மாணவன் கைது

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஓரின சேர்க்கைக்கு மறுத்த 9 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற பிளஸ்2 மாணவன் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி அடுத்த திருமுருகப்பட்டினத்தை சேர்ந்தவர் பாலாஜி. கூலித்தொழிலாளி. இவரது மகன் திருமேனிநாதன் (எ) கருப்பன்ஜி (9). நெடுவாசல் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 27ம்தேதி மாலை அப்பகுதி சிறுவர்களுடன் விளையாட சென்ற கருப்பன்ஜி இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடியபோது அப்பகுதியில் உள்ள குளத்தில் கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான்.

தகவலறிந்த வடகாடு போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் 17வது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்குப்பிடு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அரசு மேல்நிலைப்பள்ளியில் அவர் பிளஸ் 2 படித்து வருவதும், கருப்பன்ஜியை அந்த பகுதியில் உள்ள வயல் பகுதிக்கு அழைத்து சென்றதோடு ஓரின சேர்க்கையில் ஈடுபடுமாறு தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு மறுத்த சிறுவன், இதுபற்றி பெற்றோரிடம் தெரிவிக்கப்போவதாக கூறி தப்பிக்க முயன்றுள்ளார். சிறுவனை தப்ப விட்டால் தனது பெற்றோரிடமும் கூறிவிடுவான் என ஆத்திரத்தில் அந்த பகுதியில் கிடந்த நைலான் கயிற்றால் கருப்பன் ஜி கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பின்னர் எதுவும் நடக்காத போல் கிராம மக்களோடு சேர்ந்து சிறுவனை தேடுவது போல் நடித்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பிளஸ்2 மாணவனை கைது செய்தனர். புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பிளஸ்2 மாணவன் தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நேற்று அடைக்கப்பட்டார்.கொலையான சிறுவனை அவரது பெற்றோர் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் தினக்கூலிக்கு சென்று படிக்க வைத்துள்ளனர். இதில் குறிப்பாக சிறுவனின் வீடு குடிசை வீடாக இருந்தாலும் தினசரி பள்ளிக்கும், பள்ளி முடிந்து வீட்டுக்கும் செல்ல டூ வீலரில் அவரது தந்தையே அழைத்து சென்று வந்துள்ளார். செல்லமாக வளர்க்கப்பட்ட ஒரே மகனும் இறந்ததால் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Tags : Pudukkottai ,Balaji ,Thirumurukappatnam ,Pudukkottai District ,Karambakudi Taluga Karakakachi ,Thirumaninathan ,
× RELATED தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை