புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட நன்கொடை நிதியில் பெரும் முறைகேடு மற்றும் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் பொதுச்செயலாளர் சம்பத் ராய் என்பவரிடம் போலீசார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளனர். மேலும், அறக்கட்டளை அறங்காவலர் அனில் மிஸ்ரா உள்ளிட்ட பிற மூத்த நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக தெரிவித்த அறக்கட்டளை நிர்வாகம், முறையான விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியதோடு, சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோரின் ராஜினாமா கடிதங்களையும் பெற்றுள்ளது.
பக்தர்களுக்கு வழங்கிய உத்தரவாதத்தில், ராமருக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட வெள்ளி செங்கற்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட அனைத்து மதிப்புமிக்க பொருட்களும் பாதுகாப்பாக இருப்பதாக அறக்கட்டளை தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச போலீசார் நடத்தும் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், ஆதாரங்கள் முறையாக பாதுகாக்கப்படவில்லை என்றும் கூறி இரண்டு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ராமர் கோயில் நிதி மோசடி குறித்து சிபிஐ மற்றும் பிற விசாரணை முகமைகள் மூலம் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், இந்த அவசர கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு, ’கோடை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் வழக்கம்போல் செயல்படத் தொடங்கும்போது, இந்த வழக்கை விசாரித்தால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது’ என்று கூறி, மனுவை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது. மேலும், இந்த மனு மீதான விசாரணை வரும் ஜூலை 12ம் தேதி முதல் ஜூலை 17ம் தேதி வரையிலான வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
