×

கல்லுகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

 

தஞ்சாவூர், ஜூன் 29: தஞ்சாவூர் கல்லுகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன், மாநகராட்சி பொறுப்பு மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கடந்த 1995ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. 2004ம் வருடம் முதல் தமிழகத்தில் போலியோவால் எந்தக் குழந்தைக்கும் பாதிப்பு இல்லை. இந்த ஆண்டு நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து வயதிற்குட்பட்ட 1,64,908 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்கென நகரப் பகுதிகளில் 126 மையங்களும், ஊரகபகுதிகளில் 1483 மையங்களும் ஆக மொத்தம் 1609 சொட்டுமருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இப்பணியில் 6436 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 217 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள், கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள், சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டுமருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டுமருந்து வழங்கப்பட்டது.

இதில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி, மாநகர நகர நல அலுவலர் வீராசாமி, சுகாதார அலுவலர் சீனிவாசன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Polio vaccination ,Kallukulam Government Primary Health Center ,Thanjavur ,MLA ,Vijay Saravanan ,Municipal Corporation ,Mayor ,Anjugam Bhupathi ,polio ,Tamil Nadu… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...