விக்டோரியா: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்ற நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்தை பாராட்டி சீஷெல்ஸ் நாட்டின் உயரிய விருதை அதிபர் ஹெர்மினி வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடி, சீஷெல்ஸ் நாட்டிற்கு 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் சென்றார். பயணத்தின் 2ம் நாளான நேற்று, பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்டியன் ஆப் தி ப்ளூ ஹோரிசோன்’ சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த விருதை பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி வழங்கி கவுரவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்ற நடவடிக்கைகள், நீல பொருளாதாரத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றில் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விருதை பெறும் முதல் நபராகவும் பிரதமர் மோடி வரலாறு படைத்துள்ளார்.
விருதை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, ‘‘இந்த கவுரவத்தை எனக்கான அங்கீகாரமாக அல்லாமல், பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் அனைத்து நாடுகளுக்கும் அர்ப்பணிக்கிறேன். எதிர்கால தலைமுறைகளுக்காக சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பு. உலக நாடுகள் ஒன்றிணைந்து பருவநிலை சவால்களை சமாளிக்க வேண்டும். பூமியை பசுமையாகவும் நிலைத்தன்மையுடனும் மாற்ற இந்தியா உறுதியாக செயல்பட்டு வருகிறது.
அதற்காக, சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, மிஷன் லைப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், தாயின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கம், சர்வதேச புலிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது’’ என்றார். இதைத் தொடர்ந்து, சீஷெல்ஸ் நாட்டின் தேசிய தின பொன் விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, சீஷெல்சின் நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, ‘‘இந்திய பெருங்கடல் இந்தியாவையும் சீஷெல்சையும் பிரிப்பதில்லை, மாறாக ஒன்றிணைக்கிறது.
இந்தியாவும் சீஷெல்சும் உலக தெற்கு நாடுகளின் நலன்களை முன்னிறுத்தும் ஒரே நோக்கத்தை கொண்டுள்ளன. நம் இரு நாடுகளும், நீல பொருளாதாரம், மீன் வளம், கடல்சார் அறிவியல், கடல் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும்’’ என வலியுறுத்தினார். பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருது, அவரது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, நீல பொருளாதாரம் மற்றும் சிறிய தீவு நாடுகளின் முன்னேற்றத்திற்கான பங்களிப்பை உலகம் அங்கீகரிப்பதற்கான சான்று என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
* 4 ஒப்பந்தம் கையெழுத்து
பிரதமர் மோடி, சீஷெல்ஸ் அதிபர் ஹெர்மினி இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, விண்வெளி, சுகாதாரம், மேலாண்மை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 19 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், இரு நாடுகளும் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம், விண்வெளியின் அமைதியான பயன்பாட்டிற்கான ஒப்பந்தம், சீஷெல்சில் யுபிஐ டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தும் ஒப்பந்தம், புதிய தேசிய மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்பந்தம் என 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் சீஷெல்ஸ் பாதுகாப்பு படைக்கு அதிவேக ரோந்து கப்பல், 10 ராணுவ பயன்பாட்டு வாகனங்கள், 5 லேசர் ரேடியல் படகுகள், 6 ஆம்புலன்ஸ்கள், 500 டன் அரிசி மற்றும் 8,500 டன் சிமென்ட் ஆகியவற்றை இந்தியா வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவின் 50வது ஆண்டு நிறைவையொட்டி நினைவுச் சின்ன இலச்சினையும் வெளியிடப்பட்டது.
